இலங்கையின் உலகப் பாரம்பரியக் களங்கள் என எட்டு உலகப் பாரம்பரியக் களங்கள் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தினால் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை முறையே அனுராதபுரம் புனித நகர் (1982), பொலன்னறுவை புராதன நகர் (1982), சிகிரியா (1982), சிங்கராஜக் காடு (1988), கண்டி புனித நகர் (1988), காலி பழைய நகரும் அதன் தற்காப்பு கோட்டைக் கொத்தளங்களும் (1988), தம்புள்ளை பொற்கோவில் (1991) மற்றும் இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் (2010).
அனுராதபுரம் (1982)
இது இலங்கையின் வடமத்திய பகுதியிலுள்ள ஒரு புராதன நகரமாகும். அனுராதபுரம் நாட்டின் வடமத்திய மாகாணத்தின் அமைந்து அனுராதபுரம் மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. இலங்கையின் பண்டைய தலைநகர்களில் ஒன்றாக இது விளங்கியது. இது கி.மு. 4ம் நூற்றாண்டு முதல் 11ம் நூற்றாண்டு வரை தலைநகராக விளங்கியதாக நம்பப்படுகின்றது. இங்கு சிங்கள, தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். தென்னிந்திய படையெடுப்புகள் காரணமாக இதன் தலைநகர் என்ற நிலை மாற்றப்பட்டது.
உலகில் தொடர்ச்சியாக வாழ்விடமாக இருந்து வந்த தலைநகர்களில் ஒன்று என்ற புகழ் இந்நகருக்கு உண்டு. பெளத்தர்களால் இந்நகர் புனித பூமியாகப் போற்றப்படுகின்றது. உலகிலுள்ள முக்கிய தொல்பொருள் களங்களில் ஒன்றாகவும் இது காணப்படுகின்றது. இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராட்சிகள் இதன் வரலாற்றுத் தொடர்பு கி.மு. 10ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என குறிப்பிடுகின்றன.[1]
பொலன்னறுவை (1982)
இது இலங்கையின் வடமத்திய மாகாணத்திலுள்ள ஒர் புராதன நகரமாகும். தற்பொழுது இது பொலன்னறுவை மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. கி.பி 10 நூற்றாண்டு தொடக்கம் கி.பி 13 நூற்றாண்டு வரை பண்டைய இலங்கையின் தலைநகராக விளங்கியது. இது இரண்டாவது புராதன இலங்கை இராச்சியமாகும். சோழர் இலங்கையை ஆண்ட காலத்தில் இதனைத் தலைநகராக்கியிருந்தனர். பின்னர் இந்நகரம் முதலாம் விஜயபாகு மன்னர் காலத்திலும் இலங்கையின் தலைநகரமாக விளங்கியது.
பொலன்னறுவை வட மத்திய மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமும் அழகிய நகரமும் ஆகும். இங்கு பசுமையாகச் சூழலும் புராதன கட்டிடங்களும், பராக்கிரம சமுத்திரம் எனப்படும் ஆறும் காணப்படுகின்றது.
சிகிரியா (1982)
சிகிரியா மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. 1144 அடி உயரமான இக்குன்றினுள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்திரங்கள் பல உள்ளன. எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே இக்கோட்டையை முதலாம் காசியப்பன் (கி.பி. 477-495) அமைத்துத் தலைநகராக்கினான்.
இக்குகை ஓவியங்கள் இயற்கை வர்ணங்கள் கொண்டு பிராஸ்கோ முறையில் வரையப்பட்டுள்ளன. இவ் ஒவியங்களில் காணப்படும் பெண்கள் தேவதைகள் எனவும், காசியப்பனின் மனைவிகள் எனவும் கூறப்படுகின்றனர். இவர்களில் சிலர் கையில் தட்டை ஏந்தியவாறும், சிலர் மலர்க்கொத்தை ஏந்தியவாறும் சிலர் மேலாடை இன்றியும், சிலர் மேலாடையுடனும், தனித்தும், கூட்டமாகவும் வரையப்பட்டுள்ளனர். சிகிரியா இலங்கையில் அதிகம் பார்வையாளர்களால் வரலாற்று இடம் எனும் சிறப்பைப் பெற்றது.[2]
சிங்கராஜக் காடு (1988)
இது ஓர் பாதுகாக்கப்பட்ட தேசிய வனமாகும். சிங்கராஜக் காடு சபரகமுவா, தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி, காலி , மாத்தறை மாவட்டங்களில் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது. சிங்கராஜா வனம் கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் தொடக்கம் 1170 மீட்டர் உயரம் கொண்ட அயன மண்டல மழைக்காடாகும்.
இக்காட்டின் உயிரினப் பல்வகைமை மிக அதிகமாகும். இங்கு நாட்டிற்குரிய முக்கிய மரங்கள், பூச்சிகள், நிலத்திலும் நீரிலும் வாழும் உயிரினங்கள், ஊர்வன, பறவைகள், விலங்குகள் என்பன காணப்படுகின்றன. இலங்கை உள்ளூர் பறவைகள் இருபத்தியாறு வகைகளில் 20 இங்கே காணப்படுகின்றன. ஏற்கெவே முன்மொழியப்பட்ட காட்டு ஒதுக்கீடுகள் என்பவற்றை உள்ளடக்கிய 8,864 எக்டயர் பரப்பளவை உலக உரிமைத் தளமாக யுனெஸ்கோ அறிவித்தது.[3]
கண்டி (1988)
கண்டி இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இதுவே மத்திய மாகாணத்தினதும் கண்டி மாவட்டத்தினதும் தலை நகரமாகும். 1592ம் ஆண்டு தொடக்கம் 1815ம் ஆண்டு வரை அந்நியர் ஆட்சிக்கு உட்படாத கண்டி இராச்சியத்தின் தலை நகரமாக இருந்தது.
இங்குள்ள தலதா மாளிகை இலங்கையின் புகழ் பெற்ற பௌத்த ஆலயம் ஆகும். பெளத்த சமயத்தவர்களால் புனிதப் பண்டமாக மதிக்கப்படுகின்ற புத்தரின் புனிதப் பல் இங்கே உள்ளதாகப் பெளத்தர்களால் கருதப்படும் காரணத்தால் இது புனித தந்த தாது ஆலயம் எனவும் அழைக்கப்படுகின்றது. கண்டி இராச்சியத்தின் தலைநகரமாகக் கண்டி நகரம் விளங்கியபோது, அதனை ஆண்டு வந்த அரசர்களின் அரண்மனை வளாகத்தின் உள்ளேயே இவ்வாலயமும் அமைந்துள்ளது.
காலி (1988)
காலி இலங்கையிலுள்ள பெரிய நகரங்களுள் ஒன்றும், தென் மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் நகரமுமாகும். இது காலி மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான காலித் துறைமுகமும் இங்கே அமைந்துள்ளது. இங்கு 1588 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரால் முதலில் கட்டப்பட்டு, பின்னர் ஒல்லாந்தரால் 1649 ஆம் ஆண்டுக்குப் பின்னான காலப்பகுதியில் அரணாக்கப்பட்ட காலிக் கோட்டை உள்ளது. 1934 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு, பின்னர் புனரமைக்கப்பட்ட வெளிச்சவீடு ஒன்றும் இங்குள்ளது.
போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்னரே இது இலங்கையில் முக்கிய துறைமுகமாகத் திகழ்ந்தது. தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்ட அரணுள்ள நகர்களுக்கு இது சிறந்த உதாரணமாகவும், போர்த்துக்கேய முறை மற்றும் உள்ளூர் பாரம்பரிய இணைப்பினைக் கொண்டு இது அமைக்கப்பட்டது. ஐரோப்பிய காலணித்து காலத்தின்போது ஆசியாவில் கட்டப்பட்ட, எஞ்சியுள்ள பெரிய கோட்டைகளில் இதுவும் ஒன்று.
தம்புள்ளை பொற்கோவில் (1991)
தம்புள்ளை பொற்கோவில் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில் ஆகும். இங்கு 153 புத்தரின் சிலைகளும், 3 அரசர்களின் சிலைகளும், 4 தெய்வ சிலைகளும் காணப்படுகின்றன. 4 தெய்வ சிலைகளில் இந்துக் கடவுள்களான விஷ்ணு, பிள்ளையார் சிலைகளும் அடங்கும். இங்குள்ள 2,100 சதுர மீட்டர் பரப்புள்ள சுவர் ஓவியங்களில், புத்தரின் முதலாவது சொற்மொழிவு மற்றும் அவரின் சோதனை என்பன வரையப்பட்டுள்ள ஓவியங்களில் முக்கியமானவை.
பெளத்தம் இலங்கைக்கு வரு முன்னர் இங்கு வாழ்ந்த மனிதர்கள் பற்றிய ஆதாரங்கள் இப்பகுதியில் அகழ்வாராட்சி மூலம் கிடைக்கப்பட்டுள்ளன. அதில் 2,700 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட மனிதனிள் எலும்புக் கூடுகள் கிடைக்கப்பட்டன. இது இலங்கையில் மிகவும் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டுள்ள குகையும், பெரிய குகை கோயிலும் ஆகும்.
இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் (2010)
இது இலங்கையில் எட்டாவதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உலக பாரம்பரியக் களம் ஆகும். இது இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளான சிகரக் காட்டுவள சரணாலயம், ஓட்டன் சமவெளி தேசிய வனம், நக்கிள்ஸ் மலைத்தொடர் என்பனவற்றை உள்ளடக்கிய பகுதியாகும்.
இங்குள்ள மழைக் காடுகள் கடல் மட்டத்திலிருந்த 2,500 மீட்டர் (8,200 அடி) உயரத்தில் அமைந்துள்ளன. இப் பகுதி பலதரப்பட்ட பாலூட்டிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாகவுள்ளது. இது கலாச்சார மற்றும் இயற்கை கலந்த உலகப் பாரம்பரியக் களத் தகுதிக்கு முன்மொழியப்பட்டபோதும், அதன் இயற்கை அமைவே உலகப் பாரம்பரியக் களக் குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 2010 இல் இலங்கையின் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.[4]